அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த விராட், ரோஹித் - வைரலாகும் காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடங்கிய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், பாகிஸ்தான் அணியில் ஆசாம் கானிற்கு பதிலாக இமாத் வசிம் அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். அதிலும் முதல் ஓவரை எதிர்கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அந்த ஓவரிலேயே அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் மழை பெய்த காரணத்தால் முதல் ஓவர் முடிவுடன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின் அரைமணி நேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் விராட் கோலி முதல் பந்திலேயே கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்து அசத்திய நிலையில், மூன்றாவது பந்தில் தேவையில்லாத ஷாட்டில் கேட்ச் கொடுத்ததுடன் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டையும் இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்த ரிஷப் பந்த் மற்றும் அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக இந்திய அணி பவர்பிளே ஓவர்கள் முடிவில் 50 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அக்ஸர் படேல் 20 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது,