முதலிரண்டு ஓவர்களில் ஜாம்பவான்களை வீழ்த்திய நேத்ரவல்கர் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jun 12 2024 22:59 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேசம்  மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இறங்கினர்.

இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கீர் வீக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸ், அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையளித்தார்.

அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 22 ரன்களில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களுக்கு, நிதிஷ் குமார் 27 ரன்களுக்கும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க அமெரிக்க அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். அமெரிக்க அணி தரப்பில் சௌரவ் நேத்ரவல்கர் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் தனது முதல் பந்தை எதிர்கொண்ட விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஆண்ட்ரிஸ் கௌஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அவரைத்தொடர்ந்து இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை மீண்டும் நேத்ரவல்கர் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மாவும் பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்து ஹர்மீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன் ஸ்கோரையும் மெல்ல மெல்ல உயர்த்தினர்.

அதன்பின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஷப் பந்தை க்ளீன் போல்டாக்கி அலி கான் அசத்தினார். இதனால் 10 ஓவர்களுக்குள்ளேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்நிலையில் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை வீழ்த்திய சௌரவ் நேத்ரவல்கரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை