அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் விராட் கோலி சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

Advertisement

இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிய நிலையில் இந்திய அணி 8 ஓவர்களில் 63 ரன்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமானது. இருப்பினும் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட அதிரடி காட்டிய நிலையில் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அக்ஸர் படேல் ஒரு சிக்ஸருடன் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண் மற்றும் ரீஸ் டாப்லீ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News