T20 WC 2024, Super 8: 115 ரன்களுக்கு சுருண்ட ஆஃப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்து இந்திய அணி மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி வந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான், 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதின் நைப் 4 ரன்களுக்கும், முகமது நபி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் கேப்டன் ரஷித் கான் மட்டுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீசை வெளிப்படுத்திய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள வங்கதேச அணி 12.4 ஓவர்களில் எட்டினால் நடப்பு டி20 உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம் வங்கதேச அணி இந்த இலக்கை 13 ஓவர்களுக்கு மேல் எட்டினால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச்சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதிப்பெரும். மேலும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது.