T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Tue, Jun 25 2024 10:49 IST
T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கான (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள  இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்து இந்திய அணி மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி வந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான், 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதின் நைப் 4 ரன்களுக்கும், முகமது நபி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் கேப்டன் ரஷித் கான் மட்டுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீசை வெளிப்படுத்திய  ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து 116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள வங்கதேச அணி 12.4 ஓவர்களில் எட்டினால் நடப்பு டி20 உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம் வங்கதேச அணி இந்த இலக்கை 13 ஓவர்களுக்கு மேல் எட்டினால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச்சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதிப்பெரும். மேலும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியானது எந்த அணிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலும் என அடுத்தடுத்து நவீன் உல் ஹக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மேற்கொண்டு மழை பெய்த காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது. ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய சௌமீயா சர்க்கார் 10 ரன்களுக்கும், அடுத்து வந்த தாவ்ஹித் ஹிரிடோய் 14 ரன்களுக்கும், மஹ்முதுல்லா 6 ரன்களிலும், ரிஷாத் ஹொசைன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணியின் அரையிறுதி வாய்ப்பும் அச்சமயத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆனால் அதன்பின் வெற்றிகாக விளையாடி ஆஃப்கானிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கியது. அதன்பின்னும் மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது 19 ஓவர்களாக குறைக்கப்பட்டதுடன் வங்கதேச அணிக்கு 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால் தன்ஸிம் ஹசன் ஷாகிப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்டன் தாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து ஆஃப்கானிஸ்தான் அணியை அச்சுறுத்தினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் வங்கதேச அணி வெற்றிபெற 12 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 ரன்களைச் சேர்த்திருந்த தஸ்கின் அஹ்மத் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய முஸ்தஃபிசூர் ரஹ்மானும் விக்கெட்டை இழந்தார். இதனால் வங்கதேச அணியானது 17.5 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வங்கதேச அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லிட்டன் தாஸ் 54 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

அதேசமயம் ஆஃப்கானிஸ்தானின் இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியையும், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை