ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லரின் அபாரமான த்ரோவின் மூலம் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே மார்கோ ஜான்செனும் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பில் சால்ட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பட்லருடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் தொடக்கத்தில் அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினார். இதனால் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டையும் இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஜோஸ்பட்லர் 17 ரன்களுக்கும், மொயீன் அலி 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இங்கிலாந்து அணியானது 61 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரையும் மளமளெவென உயர்த்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Advertisement

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் இறுதிவரை களத்தில் இருந்து போட்டியை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் 19ஆவது ஓவரை மார்கோ ஜான்சன் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹாரி ப்ரூக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 

ஆனாலும் இங்கிலாந்து அணியால் அந்த ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், கடைசி ஓவரில் வெற்றி இலக்காக 14 ரன்கள் தேவைப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஆன்ரிச் நோர்ட்ஜே வீச, ஓவரின் முதல் பந்திலேயே 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களைச் சேர்த்திருந்த ஹாரிக் புரூக் விக்கெட்டை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் திருப்பினார். அதன்பின் களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, அடுத்த பந்தில் சாம் கரண் பவுண்டரி அடித்து ஆட்டத்தின் அழுத்தத்தை அதிகரித்தார்.

ஆனால் அதன்பின் சூதாரித்து பந்துவீசிய் ஆன்ரிச் நோர்ட்ஜே அடுத்தடுத்து பந்துகளில் ரன்களைக் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News