ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணி அறிவிப்பு; சாம்சன், ரிஷப், சஹாலிற்கு வாய்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அணியின் பேட்டர்கள் வரிசையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தேர்வாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விக்கெட் கீப்பர்களுக்கான தேர்வில் நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிஷப் பந்து ஓராண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
அதேசமயம் அணியின் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ததுடன், ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் ஷிவம் தூபே மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோருடன் நீண்ட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த யுஸ்வேந்திர சஹாலிற்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேபோல் அணியின் கூடுதல் வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்