டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் ஆகியோரது அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 176 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 67 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபகர் ஸமான் 55 ரன்களையும் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 28 ரன்னில் மார்ஷ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பிய நிலையில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் - மேத்யூ வேட் இணை அதிரடியாக விளையாடி எதிரணியை மிரளவைத்தனர். அதிலும் 19 ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்யூ வேட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Also Read: T20 World Cup 2021
இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்களையும், மேத்யூ வேட் 41 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.