டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அக்டோபர் 16 முதல் 21 வரை தகுதிச்சுற்று போட்டிகளும், அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்படுகின்றன.
இத்தொடரின் முதல்சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கியன. அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய யூஏஇ அணியின் தொடக்க வீரர்கள் ஷிராக் சூரி 12 ரன்னிலும், காஷிப் தாத் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த முஹ்முத் வாசீம் - விருத்யா அரவிந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தியது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஹ்முத் வாசீம் 41 ரன்களிலும், விருத்தியா அரவிந்த் 18 ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய ஸவார் ஃபரித், பசில் ஹமீத் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் பாஸ் டி லீட் வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை யூஏஇ அணி இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் யூஏஇ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளையும், கிளாசென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.