இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!

Updated: Mon, Jun 03 2024 19:10 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சிறப்பான ஐபிஎல் தொடருக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் கூட அவர்கள் ஒருசில வீரர்களுக்கு ஓய்வளித்ததை பார்த்துள்ளோம். அதனால் அவர்களின் திட்டங்களுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 

ஆனால் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையில் விளையாடுவதுடன், உங்களது வீரர்கள் அனைவரும் ஒரே அணுகுமுறையைப் பின் பற்றினால் இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் சமமான போட்டியை உங்களால் கொடுக்க முடியும். மேலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் பால் ஸ்டிர்லிங் அணியை வழிநடத்தும் விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் நாங்கள் இத்தொடரில் நிச்சயம் ஒரு சிறந்த அணியாக செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கே), மார்க் அதிர், ரோஸ் அதிர், ஆண்டி பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை