ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸா ஹென்றிக்ஸ் (29) - கேப்டன் ஐடன் மார்க்ரம் (23) ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் மார்கோ ஜான்சென் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், “நிச்சயம் ஒரு அணியாக இது ஒரு சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாட சூழல் எங்களை அனுமதிக்கவில்லை. இது தான் டி20 கிரிக்கெட். அதனால் நீங்கள் அமைத்து விதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். மேலும் இன்றைய போட்டியில் தென் அப்பிரிக்கா அணி சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அனாலும் இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சின் மூலம் நாங்கள் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்துள்ளோம்.

இத்தொடரின் பாதியிலேயே முஜீப் உர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபியும் மிகச்சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் சிறப்பாக தொடங்கியதன் காரணமாகவே ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். இனி எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை கையாள நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News