விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் மிசோரம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மிசோரம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மிசோரம் அணிக்கு ஜெஹு ஆண்டர்சன் மற்றும் லால்ஹ்ரியாத்ரெங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லால்ஹ்ரியாத்ரெங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் ஆண்டர்சனும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அக்னி சோப்ரா 23 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மிசோரம் அணியானது 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 71 ரன்களில் ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5.2 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு சந்தீப் வாரியர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 46 ரன்களையும், துஷார் ரஹேஜா 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் தமிழ்நாடு அணி 10 ஓவர்களிலேயே விக்கெட் ஏதும் இழக்காமல் வெற்றி இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிசோரம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தங்கள் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.