BGT 2024-25: அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரரைத் தேர்வு செய்த பிசிசிஐ!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வந்த நிலையிலும், அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இருப்பினும் சமீப காலங்களில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இனி அஸ்வினின் இடத்தை நிச்சயம் இவர் நிறப்புவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அறிமுக வீரர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் தனுஷ் கோட்டியான இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 33 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் பேட்டிங்கில் 2 சதம், 13 அரைசதங்கள் என 1525 ரன்களையும், பந்துவீச்சில் 3 ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து 101 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.