விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சுரேஷ் குமார் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்களில் சுஜய் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய முகீலேஷ் 13 ரன்களிலும், முகமது ரன்கள் ஏதுமின்றியும், ராம் அரவிந்த் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் நடராஜன், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ராதா கிருஷ்ணன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமித் சாத்விக்கும் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த துஷார் ரஹேஜா மற்றும் கேப்டன் விஜய் சங்கர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய விஜய் சங்கர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பாலச்சந்தர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய மொஹ்மது அலியும் 35 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜா 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் திருப்பூர் அணி வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்திற்கு வந்த அஜித் ராம் பவுண்டரி அடித்த நிலையில், கடைசி பந்தையும் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News