ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபைய ஆட்டத்தில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் ரஹேஜா விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக்கும் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 67 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த பாலச்சந்தர் அனிருத் - முகமது அலி இணையும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அனிருத் 21 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து முகமது அலியுடன் இணைந்த கேப்டன் சாய் கிஷோரும் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் 200 ரன்களை எட்டியது. இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களைக் குவித்தது. 

திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது அலி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களையும், கேப்டன் சாய் கிஷோர் 8 ரன்களையும் சேர்த்தனர். கோவை கிங்ஸ் தரப்பில் கேப்டன் ஷாருக் கான், சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜிவி விக்னேஷ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சுஜயும் 19 ரன்களில் நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய ஜெயராமனும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் கோவை கிங்ஸ் அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் - முகிலேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறகவிட்டது அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

அதன்பின்னரும் அதிரடியாக விளையாடிய ஷாய் சுதர்ஷன் அடுத்தடுத்து சிக்ஸர்களையும், பவுண்டரியையும் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 9 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 123 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய முகிலேஷ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News