SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!

Updated: Tue, Jan 28 2025 12:53 IST
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
Image Source: Google

இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில், இதில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார். முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். 

தனது அறிமுக போட்டியிலேயே உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லவும் மிக முக்கிய காரணமாக கொன்ஸ்டாஸ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இனி வரும் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரமாக சாம் கொன்ஸ்டாஸ் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் அவர் தொடக்க வீரர் இடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்த்ல் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் தற்போது டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதால், மிடில் ஆர்டரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார். இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது அவர் புதிய பந்திலும் சிறப்பாக விளையாடினார். அவரால் தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் ஆழ்த்த முடியும். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும். இதன் காரணமாக தேர்வாளர்களும் டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரர் இடத்தில் களமிறக்க ஆர்வமாக உள்ளனர்.

அதேசமயம் சாம் கொன்ஸ்டாஸுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இங்கு கிடைக்கும் பயிற்சி அவரின் எதிர்காலத்திற்கு உதவியாக அமையும். ஏனெனில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது எனக்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அப்போது நான் வலை பயிற்சியில் அதிக கவனத்தை செலுத்தினேன். வலைபயிற்சியில் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதன் மூலம் நான் வளர்த்துக் கொண்ட திறன்கள் ஏராளம்.

எனவே அவர் விளையாடினாலும் இல்லாவிட்டாலும் இந்த தொடர் அவருக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். நாங்கள் இப்போட்டிககான பிளேயிங் லெவனை விரைவில் வெளியிட விரும்புகிறோம். ஆனால் இங்குள்ள சூழ்நிலை மற்றும் விஷயங்கள் மிக விரைவாக மாறக்கூடும் என்பதால், அதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனால் சாக் கொன்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் 5ஆவது இடத்திற்கான போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை