இந்த வடிவத்தின் உண்மையான ஜாம்பவான் - விராட் கோலிக்கு ஏபிடி வில்லியர்ஸ் வாழ்த்து!

Updated: Mon, May 12 2025 14:55 IST
Image Source: Google

இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், ஆனால் பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

இருப்பினும் இன்றைய தினம் விராட் கோலி தனது சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த அறிவிப்பானது பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி தனது ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வை அறிவித்திருப்பது தான். 

தற்போது 36 வயதான விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணிக்கு இது பேரிழப்பாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவரது கிரிக்கெட் சேவையை கிரிக்கெட் உலகம் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. 

அதன் ஒருபகுதியாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! உங்கள் உறுதியும் திறமையும் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளன. இந்த வடிவத்தின் உண்மையான ஜாம்பவான்” என்று சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார். இதனையடுத்து அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை