யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் துல்நித் சிகெரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமத் தின்சராவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை யு19 அணியானது 8 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சாருஜன் சண்முகநாதன் மற்றும் லக்வின் அபேசிங்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், அணிக்கு தேவையான ரன்களையும் சேர்த்தனர்.
இதில் சிறப்பாக விளையாடிய அபேசிங்க தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களைக் கடந்தது. பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்முகநாதன் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த அபேசிங்கவும் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சேட்டன் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆயூஷ் மாத்ரே 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷியும் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 67 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது அமான் 25 ரன்களையும், கார்திகேயா 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை யு19 அணியை வீழ்த்தியதுடன் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.