மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜி கமலினி - கோங்கடி த்ரிஷா இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களைச் சேர்த்திருந்த ஜி கமலினி தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சனிகா சால்கேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த த்ரிஷா தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

Advertisement

இதன்மூலம் மகளிர் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் வீராங்கனை எனும் வரலாற்று சாதனையையும் த்ரிஷா பதிவுசெய்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த த்ரிஷா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 110 ரன்களையும், சனிகா சால்கே 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இந்திய யு19 மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 208 ரன்களைக் குவித்தது. 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு பிபா கெல்லி மற்றும் எம்மா வால்சிங்கம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பிபா கெல்லி 12 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை எம்மா வால்சிங்கம் 12 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் நியாம் முயர் ஒரு ரன்னிலும், பிப்பா ஸ்ப்ரூல் 11 ரன்னிலும், சார்லேட் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 42 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஸ்காட்லாந்து யு19 அணி 14 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஆயுஷி ஷுக்லா 4 விக்கெட்டுகளையும், வைஷ்னவி சர்மா, கோங்கடி த்ரிஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து யு19 அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News