UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!

Updated: Tue, May 20 2025 12:06 IST
Image Source: Google

 ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசன் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 59 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் லிட்டன் தாஸுடன் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லிட்டன் தாஸ் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் ஒருபக்கம் அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய ஜக்கர் அலி 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோயும், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் நடையைக் கட்டினார். இதன் காரணமாக வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 205 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஹம்மது ஜவதுல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வசீம் மற்றும் முகமது ஸொஹைப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் முகமது வசீம் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது ஸொஹைப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராகுல் சோப்ரா, அலிசன் ஷராஃபு ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத்தொடர்ந்து 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 82 ரன்களைச் சேர்த்த கையோடு முகமது வசீமும் விக்கெட்டை இழந்தாலும் ஐக்கிய அரபு அமீரக அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இதன்மூலம் யுஏஇ அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தையும் முதல் முறையாக வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது வசீம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை