அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிபேற்றுள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஹஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டைலர் - கேப்டன் மோனக் படேல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டீவன் டைலர் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த மோனக் படேலும் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அண்டிரிஸ் கௌஸும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 4 சிக்சர்களுடன் 34 ரன்களையும், வான் ஷால்க்விக் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்களை குவித்தது. இதன்மூலம் அமெரிக்க அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவுசெய்து அசத்தியது.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கனடா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்ரீமந்தா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரகாத் சிங் 27 ரன்களுக்கும், நிக்கோலஸ் கிர்டன் 21 ரன்களுக்கும், நவ்நீத் தலிவால் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்ஷ் தகர் ஒருபக்கம் அதிரடியாக விளையாட முயற்சிக்க, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் சாத் பின், பிரவீன் குமார், திலன் ஹெலிகர், ரிஷிவ் ராகவ், உதய பாக்வான் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.4 ஓவர்களில் கனடா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.