மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது - ரவீந்திர ஜடேஜே!

Updated: Sun, Feb 05 2023 21:58 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாத சூழல் உருவானது. ரவீந்திர ஜடேஜா இல்லாமல் களமிறங்கியது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்தது. இந்த நிலையில், அவர் தனது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். 

இந்திய அணியின் ஜெர்சியினை மீண்டும் அணிவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளது முக்கியத்தும் பெறுகிறது. பிசிசிஐ தொடர்பான நேர்காணலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். இந்தப் பயணத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன். மீண்டுன் அணியின் ஜெர்சியை அணிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

ஏனென்றால், நீங்கள் 5 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையென்றால் உங்களது மனநிலை எப்போது மீண்டும் அணிக்காக விளையாடப் போகிறோம் என்ற கவலையில் இருக்கும். நான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தேன். எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் என்னை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை கூறினார்கள். 

நான் உலகக் கோப்பைக்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதா அல்லது உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்வதா என்ற குழப்பத்தில் இருந்தேன். நான் உலகக் கோப்பை ஆடும் லெவனில் இடம் பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். 

அதனால், உலகக் கோப்பைக்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதென முடிவெடுத்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கடினமாக உணர்ந்தேன். இருப்பினும், மீண்டும் இந்திய ஜெர்சியினை அணிந்து விளையாட வேண்டும் என்ற உந்துதல் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்தது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை