விஜய் ஹசாரே கோப்பை: யுவராஜ் சிங், பிஷ்னோய் அசத்தல் சதம்; ஹரியான அபார வெற்றி!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய லீக் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேச அணியும், ஹரியானா அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஹரியானா அணியில் ஓபனர்கள் சைதன்யா பிஷ்னோய் 134 (124), 18 வயதே ஆகும் இளம் வீரர் யுவராஜ் சிங் 131 (116) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்து அசத்தியது. அருணாச்சல பிரதேச அணி தரப்பில் யப் நியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணியில் ஒருவர் கூட 30+ ரன்களை அடிக்கவில்லை. அதிகபட்சமாக கம்சா யங்க்போ 23 (29) ரன்களை அடித்தார். மற்றவர்கள் அனைவரும் சொதப்பியதால், அருணாச்சல பிரதேச அணி 32.3 ஓவர்களில் 91/10 ரன்களை மட்டும் சேர்த்து, 306 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.
ஹரியானா அணி தரப்பில் ராகுல் தேவத்தியா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மோஹித் ஷர்மா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர்.