ரஞ்சி கோப்பை 2024-25: அடுத்த சுற்று போட்டிகளில் விராட், ராகுல் பங்கேற்பதில் சிக்கல்!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் இந்திய அணியின் இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் அடுத்த சுற்றுக்கான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஜனவர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த சுற்று ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெல்லி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது கழுத்து பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இப்போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் கேல் ராகுல் தனது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக 23ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு சதம் உள்பட 190 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அதேசயம் கேஎல் ராகுல் விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உள்பட 276 ரன்களைச் சேர்த்திருந்தார். இருவரது பேட்டிங்கும் பெரிதளவில் கவனத்தை ஈர்க்காத காரணத்தால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.