சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க தவறினாலும், இந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டியில் 1000 ரன்கள்
இப்போட்டியில் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தனது 1000 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 808 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள்
- 1000 - விராட் கோலி (சராசரி 55.44)*
- 808 - ரோஹித் சர்மா (சராசரி 42.52)
- 731 - ரிக்கி பாண்டிங் (சராசரி 45.68)
- 657 - சச்சின் டெண்டுல்கர் (சராசரி 50.53)
- 595 - குமார் சங்கக்கார (சராசரி 39.66)
சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை முறியடிப்பு
மேற்கொண்டு இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக முறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் 23 முறை 50+ ஸ்கோரை பதிவு செய்து சச்சின் டெண்டுகர் முதலிடத்தில் இருந்த நிலையில், தாற்போது விராட் கோலி 24 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக 50+ ஸ்கோர்கள்
- 24 - விராட் கோலி
- 23 - சச்சின் டெண்டுல்கர்
- 18 - ரோஹித் சர்மா
- 17 - குமார் சங்கக்கார
- 16 - ரிக்கி பாண்டிங்
யுவராஜ் சிங்கை சமன் செய்தார்
இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக யுவராஜ் சிங் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில், தற்போது விராட் கோலியும் மூன்றாவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று அவரது சாதனையை சமன்செய்தார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..,
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரண்மாக 49.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்பின் விராட் கோலி 84 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 42 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.