இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கோலி; இப்பெருமையை பெரும் முதல் ஆசியரும் இவர்தான்!
விராட் கோலி என்றால், கிரிக்கெட் மட்டும்தான். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும்தான் அவரின் சாதனைத் தடம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கிரிக்கெட்டையும் தாண்டி கோலியின் சாதனை நீண்டுள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் இந்திய அளவிலும், உலக அளவிலும் இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்ஸைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றார்.
இந்நிலையில் தற்போது ஆசிய அளவில் இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் (15 கோடி) ஃபாலோயர்களைக் கொண்ட முதல் நபர் எனும் மகுடத்தை விராட் கோலி படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இச்சாதனையைப் படைக்கும் கால்பந்து வீரர் அல்லாத முதல் தடகள வீரர் எனும் பெருமையுயும் விராட் கோலி பெற்றுள்ளார்.
ஐசிசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், "இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் 32 வயதான இளம் வீரர் விராட் கோலி" எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலிக்கு ஃபேஸ்புக்கில் 4.79 கோடி பின்தொடர்பவர்களும், ட்விட்டரில் 43.04 கோடி பேரும் இருக்கின்றனர்.
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்ஸை கொண்டவர்கள் தரவரிசையில் விராட் கோலி 19ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இப்பட்டியலில் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கான இன்ஸ்டாகிராம் 419 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் முதலிடத்திலும், கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 337 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் 266 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாம் மிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.