ஐபிஎல் 2024: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!

Updated: Mon, Apr 22 2024 14:16 IST
ஐபிஎல் 2024: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி! (Image Source: Google)

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகார் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 50 ரன்கள், ரிங்கு சிங் 24 ரன்கள், ரஸல் 27 ரன்கள், ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியில்  விராட் கோலி 18 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதார் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் 55 ரன்களுக்கும், ராஜத் பட்டிதார் 52 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் லோம்ரோர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கரண் சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ஆர்சிபி அணி பக்கம் திருப்பினார்.  இதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 20 ரன்கள் எடுத்திருந்த  கரண் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே ஆர்சிபி அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் கேகேஆர் அணி  ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு சிக்ஸர்களை விளாசியதன் மூலம் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி, நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும் 250 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் ஒரே அணிக்காக 250 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி பதிவுசெய்துள்ளார்.

முன்னதாக இந்திய வீரர் ரோஹித் சர்மா 275 சிக்ஸர்களுடன் இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், இந்திய வீரர் ரோஹித் சர்மா 275 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் 251 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 250 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்திலும், இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி 247 சிக்ஸர்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை