ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஃபீல்டிங்கில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் கேட்ச் பிடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை பெற்றுள்ளார்.
அதன்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய இன்னிங்ஸின் 45ஆவது ஓவரின் நான்காவது பந்தில் மாட் ஹென்றி விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகாளை பிடித்த ஃபீல்டர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில், முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 509 போட்டிகளில் 571 இன்னிங்ஸ்களில் 334 கேட்ச்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது விராட் கோலி இந்திய அணிக்காக 548 சர்வதேச போட்டிகளில் 657 இன்னிங்ஸ்களில் விளையாடி 334 கேட்ச்களை பிடித்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் இவர்கள் இருவர் மட்டுமே 300க்கும் மேற்பட்ட கேட்ச்சுகளை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக அதிக கேட்சுகள் (ஃபீல்டிங்கில்)
- 334 - விராட் கோலி*
- 334 - ராகுல் டிராவிட்
- 261 - அசாருதீன்
- 256 - சச்சின் டெண்டுல்கர்
- 229 - ரோஹித் சர்மா
- 186 - வீரேந்திர சேவாக்
மேலும் நேற்றைய நியூசிலாந்து அணிக்க்கு எதிரான போட்டியின் மூலம் விராட் கோலி தனது 300ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதனால் அவர் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இப்போட்டியில் அவர் 14 பந்துகாளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கையோடு கிளென் பிலீப்ஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்தனர்.நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர ரச்சின் ரவீந்திரன், கைல் ஜேமிசன், மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் 1-1 விக்கெட்டை வீழ்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.