2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!

Updated: Mon, Jan 01 2024 12:14 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமாக ஜொலித்து வருபவர் விராட் கோலி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதமடிக்காமல் இருந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இதில் உலகக்கோப்பை வெல்ல முடிய வில்லை என்ற ஒரு வருத்தம் மட்டும்தான் இருந்தாலும் பல உச்சகட்ட சாதனைகளை படைத்திருக்கிறார். 

அதன்படி 2023 ஆம் ஆண்டில் விராட் கோலி 36 இன்னிங்ஸில் 66 சராசரியுடன் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். மேலும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 8 சதங்கள், 10 அரை சதம் அடித்திருக்கிறார். இதன்மூலம் ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

இதேப்போன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸ் விளையாடி 1,377 ரன்களை விராட் கோலி அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 8 அரை சதம் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டுகளில் விளையாடி 671 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் இரண்டு சதம் அடங்கும். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கார்.

மேலும் இதுவரை இல்லாத அளவில் ஒரு உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார். இதேபோன்று 2023 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 117 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒரு நாள் கிரிக்கெட் சதம் சாதனையை கோடி முறியடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையும் கோலிக்கு கிடைத்தது. 

அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் 2000 ரன்களை விராட் கோலி கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஏழு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்ளை கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு குமாரா சங்கக்காரா ஆறுமுறை படைத்திருந்தார். அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தபோது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இதற்கு முன்பு சச்சின் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் விராட் கோலி முறியடித்துள்ளார்.இதேபோன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றிருந்தபோது பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 122 ரன்கள் குவித்தார். அப்போது அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். இதேபோன்று 2023 ஆம் ஆண்டில் விராட் கோலி இலங்கைக்கு எதிராக 88 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டில் ஆயிரம் ரன்களை எட்டாவது முறையாக கடந்து சாதனை படைத்தார். 

இதேபோன்று 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். மேலும் அதே சீசனில் 7,000 ரன்களை ஐபிஎல் தொடரில் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் கோலி பெற்றார். 

 

இதேபோன்று 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் சதம் அடித்தபோது ஒரு உலக கோப்பையில் அதிக முறை ஐம்பது ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை விராட் கோலி படைத்தார். சச்சினும், சகிபுல் ஹசனும் ஏழு முறை 50 ரன்களுக்கு மேல் ஒரு உலகக்கோப்பை சீசனில் கடந்த நிலையில் விராட் கோலி அதனை 2023 ஆம் ஆண்டு முறியடித்தார்.

விராட் கோலி 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் அடித்ததன் மூலம் அதிவேகமாக 75 சதம் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விராட் கோலி முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 76 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆபிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை