சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?

Updated: Sat, May 10 2025 12:24 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளதுடன், பல சாதனைகளையும் படைத்துள்ளார். 

மேற்கொண்டு மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையின் காரணமாக சேனா நாடுகளில் வெற்றிகளைக் குவித்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தினார். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது பேட்டின் ஃபார்ம் சரிவை சந்தித்ததை தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கி இருந்தது. 

மேலும் இந்த காலகட்டத்தில் அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் போட்டிகளில் விளையாடி மூன்று சதங்களுடன் 1990 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதுதவிர்த்து நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் ஒரு சதத்தை மாட்டுமே அடித்திருந்த நிலையில் மற்ற போட்டிகளில் அவர் பெருமளவில் ரன்களைச் சேர்க்க தவறி இருந்தர். இந்நிலையில் அவர் சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார்.

இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும் செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும், இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இங்கிலாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் விராட் கோலியின் முடிவும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி, “அவர் தனது முடிவை எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக வாரியத்திடம் தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருப்பதால், அதை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ அவரை வலியுறுத்தியுள்ளது. இதற்கு அவர் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Also Read: LIVE Cricket Score

தற்போது 36 வயதான விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டு, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை