இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இம்மாத இறுதியில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இத்தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் 14,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் (18,426) மற்றும் இலங்கை அணியின் குமார் சங்கக்கார (14,234) மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதுவரை விளையாடியுள்ள 295 ஒருநாள் போட்டிகளில் கோலி 13906 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் 14000 ரன்களை எட்டினால், 300க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அதேசமயம் இந்த மைல்கல்லை எட்ட, சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களையும், குமார் சங்கக்காரா 378 இன்னிங்ஸ்களையும் எடுத்துகொண்டனர்.
Also Read: Funding To Save Test Cricket
இது தவிர, இத்தொடரில் விராட் கோலி 5 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய 5ஆவது வீரர் எனும் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கவுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 155 சிக்ஸர்களை அடித்து 5ஆவது இடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி 151 சிக்ஸர்களை அடித்து 6ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.