டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு கூடுதல் பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் முடிவு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. தற்போது வரை இந்திய அணி தான் அதிகபட்சமாக 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நவம்பர் 6ஆம் தேதியன்று மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ள போதும், இன்னும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. பாகிஸ்தான் அணியும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருவதால், கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வேவுடன் வெற்றி பெற்றால் தான் நேரடியாக அரையிறுதிக்கு செல்ல முடியும்.
இதற்காக மெல்பேர்னுக்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்கு தான் சிக்கலே உண்டாகியுள்ளது. இந்திய அணியில் கலக்கி வரும் விராட் கோலி, எந்தவொரு நாளும் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என ஈடுபட்டு வருகிறார். அதற்கான பலனும் கிடைத்துள்ளது. எனவே இதே முறையை மற்ற வீரர்களுக்கும் வழங்கவுள்ளார் டிராவிட்.
அதாவது இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் நாளைய தினம் எந்தவித ஓய்வும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தே தீரப்படும் என ராகுல் டிராவிட் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து வீரர்களும் ஜிம்பாப்வே போட்டியில் கம்பேக் தருவதை பார்க்கலாம்.