PSL 2023: கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி பேஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!

Updated: Wed, Feb 15 2023 10:28 IST
Wasim, Malik's Knocks In Vain As Peshawar Zalmi Beat Karachi Kings By 2 Runs In PSL 8 Thriller (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பேஷவர் ஸால்மி அணி, இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பேஷாவர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 10 ரன்களிலும், சாய்ம் அயூப் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் - கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 68 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசம், இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடந்து வந்த பனுகா ராஜபக்க்ஷாவும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் காட்மோருடன் ஜோடி சேர்ந்த ஜிம்மி நீஷமும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொஹ்லர் காட்மோர் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 92 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து, 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பேஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைக் குவித்தது. கராச்சி கிங்ஸ் தரப்பில் மிர் ஹம்சா, ஆண்ட்ரூ டை, பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் ஷர்ஜில் கான் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மேத்யூ வேட் 23, ஹைதர் அலி 12, அக்ரம் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் இமாத் வாசிம் - ஷோயிப் மாலிக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 52 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய இமாத் வாசிம் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை மட்டுமே சேர்த்தனர்.

இதனால் பெஷாவர் ஸால்மி அணி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை