ஆட்டத்தின் முடிவை மாற்றிய மார்க்ரமின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய குயின்டன் டி காக் 22 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் டி காக்கும் 65 வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மில்லர் 43 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்ளைச் சேர்த்தது.
அதன்பின் சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. அதன்படி பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் லிவிங்ஸ்டோன் 33 ரன்களில் விக்கெட்டை இழக்கம், மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஹாரி புரூக்கும் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியாததால், இங்கிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் இங்கிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹாரி புரூக் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஐடன் மார்க்மின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.