மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது ஃபின் ஆலனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதானையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தனர்.

Advertisement

ஆனால் இதில் டூ பிளெசிஸ் 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிலிந்த் குமார் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அரைசதம் கடந்திருந்த டெவான் கான்வே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜோஷுவா ட்ரொம்ப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களையும் எடுத்து இறுதிவரை போராடினர். 

ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 10 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், எம்எல்சி தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஃபின் ஆலன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் போது யூனிகார்ன்ஸ் அணியின் கேப்டன் கோரி ஆண்டர்சன் பிடித்த கேட்ச் ஒன்று தற்சமயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 45 ரன்கள் எடுத்திருந்த போது கர்மி பந்துவீச்சில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த வேகத்தில் வராத காரணத்தால் அந்த ஷாட்டை அவரால் முழுமையாக விளையாட முடியவில்லை.

 

Advertisement

இதனால் 30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியே சென்ற அந்த பந்தை சரியாக கவனித்த கோரி ஆண்டர்சன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாவி ஒற்றைக்கையில் கேட்ச்சை பிடித்து அசத்தினார். இதன்மூலம் அரைசதத்தை நெருங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸும் 45 ரன்களுடன் நடையைக் கட்டினார். இந்நிலையில், கோரி ஆண்டர்சன் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News