பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாம் 45 ரன்களையும், ஆண்டிலே சிமெலேன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். எம்ஐ கேப்டன் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வென்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கெல்டன் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களையும், ரஸ்ஸி வென்டர் டுசென் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி கார்பின் போஷ் வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் அணி வீரர் டாம் அபெல் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டீப் ஸ்கொயர் திசையை நோக்கி தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை முழுமையாக விளையாடியதால் பந்து சிக்ஸருக்கு சென்றதாக பார்க்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டவுன் அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பந்தை சரியாக கணித்து எகிறியதுடன் ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்தும் அசத்தினார். அவரது இந்த கேட்ச்சை கண்ட ரசிகர்களும் ஒருகணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் டாம் அபெல் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் டெவால்ட் பிரீவிஸின் இந்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.