மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபெரீரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் பிரிட்டோரியஸ் 27 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களிலும், ஹெர்மான் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தன. பின்னர் களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் மற்றும் கேப்டன் டேவிட் மில்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் வான் பியூரன் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டேவிட் மில்லர் 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் சூப்பர் கிங்ஸ் வீரர் ஃபெரீரா விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி முஜீப் உர் ரஹ்மான் வீசிய இன்னிங்ஸின் 17ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட ஃபெரீரா லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். அவர் அடித்த அந்த பந்தானது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. இந்நிலையில் ஃபெரீரா விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.