ஐசிசி டி20 உலகக்கோப்பை: தீவிரமாக தயாராகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரல் காணொளி!

Updated: Mon, May 06 2024 15:59 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தீவிரமாக தயாராகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரல் காணொளி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியானது இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை சமீபத்தில் அறிவித்தது. அந்தவகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், வில் ஜேக்ஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த அதிவேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக தனது கம்பேக்கை கொடுக்கவுள்ளார். 

இதன்மூலம் இலங்கிலாந்து அணி வலிமைவாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவதுடன், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்த உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். அதன்படி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆர்ச்சர், இன்று நடைபெற்ற போட்டி ஒன்றி 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

அதிலும் குறிப்பாக அவர் வீசிய ஒரு பந்தானது ஸ்டம்புகளை தகர்த்துச்சென்றது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆர்ச்சர் அதன்பின் காயம் கரணமாக விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தனது பழைய ஃபார்மில் விளையாடிவருவது அணிக்கு மிக்கபெரும் பலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை