முதல் பந்திலேயே க்ளீன் போல்டான தோனி; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ரஹானே 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின்னர் 32 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட்டும், ரன்கள் ஏதுமின்றி ஷிவம் தூபேவும் என ராகுல் சஹாரின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத்தொடர்ந்து 30 ரன்களில் டேரில் மிட்செல்லும், 17 ரன்களில் மொயீன் அலியும், 11 ரன்களில் மிட்செல் சாண்ட்னரும், 17 ரன்களில் ஷர்துல் தாக்கூரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் அரைசதத்தை நெருங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இப்போட்டியின் 19ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீச அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஷர்துல் தாக்கூர் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி முதல் பந்தை சரியாக கணிக்க தவறவே, அவரும் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ஹர்ஷப் படேல் பந்துவீச்சில் எம் எஸ் தோனி போல்டாகிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.