முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாறமளித்தனர்.
பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அக்ஸர் படேல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களிலும், அவருக்கு துணையாக விளையாடிய ஷிவம் தூபே 27 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணியானது 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ரீஸா ஹென்றிக்ஸை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களீன் போல்டாக்கிய காணொளியானது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.