அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸல் 35 ரன்களை சேர்த்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியில் டேவல்ட் பிரீவிஸ் 27 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நியூயார்க் அணியின் கேப்டன் கீரென் பொல்லார்ட் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் கீரென் பொல்லார்ட் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்ஸரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.
இதனையடுத்து போட்டி முடிந்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கிரென் பொல்லார்ட், தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். இந்நிலையில் கீரென் பொல்லார்ட் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து தொப்பியை பரிசளித்த கணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.