ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னிலும், ஷுப்மன் கில் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் பராக் 22 ரன்னில் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களிலும், ஷிவம் தூபே 26 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஷிவம் தூபேவும், தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சஞ்சு சாம்சன் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பிராண்டன் மவுடா வீசிய 12ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை சஞ்சு சாம்சன் பந்துவீச்சாளர் தலைக்கு மேல் சிக்ஸர் விளாசி அசத்தினார். அந்த சிக்ஸரானது 110 மீட்டர் தூரத்திற்கு சென்றது. தற்போது சஞ்சு சாம்சன் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.