எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை சேஸ் செய்ய முடியும் என்று நம்புகிறோம் - ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறார். இலங்கை அணியின் தரப்பில் காயமடைந்த சுழற் பந்துவீச்சாளர் தீக்சனா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹேமந்த் துஷாரா இடம்பெற்று இருக்கிறார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஐந்து வீரர்களும் திரும்பி இருக்கிறார்கள். அவர்களது இடத்தில் இடம் பெற்ற ஐவரும் வெளியேறியிருக்கிறார்கள். இந்திய அணியின் தரப்பில் ஒரே மாற்றமாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்த அக்சர் படேல் இடத்தில் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்த போட்டிக்கான டாசை இழந்த பின் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த வறண்ட ஆடுகளத்தை பார்க்க முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும். இலங்கை எவ்வளவு ரன்களை ஸ்கோர் போர்டில் வைத்தாலும் அதை எங்களால் தோற்ற முடியும் என்று நம்புகிறோம். முதலில் ஆக்ரோஷமாக பந்துவீச்சில் செயல்பட ஆடுகளம் என்ன மாதிரி உதவுகிறது என்பதை பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கடந்த ஆட்டத்தில் நாங்கள் இலக்கை மிகவும் நெருங்கி வந்தோம்.
இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் சரியான ஒன்றாக இருக்கலாம். இன்று நம்முடைய வேலை பந்தில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், பிறகு பேட்டிங்கில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் இரு அணிகளுக்கும் நல்ல ஆதரவை கொடுத்தனர். இதில் இலங்கை அணிக்கு கொஞ்சம் ஆதரவு கூடுதலாக இருக்கலாம். இவர்கள் நல்ல ஒரு போட்டிக்கு உத்வேகமாக இருப்பார்கள். கடைசிப் போட்டியில் ஓய்வு பெற்ற அனைவரும் திரும்புகிறார்கள். அக்சர் காயம் அடைந்ததால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் வருகிறார்” என்று கூறியுள்ளார்.