ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 7ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் ஜதிந்தர் சிங், கேப்டன் அகிப் இலியாஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த காஷ்யப் - அயான் கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் காஷ்யப் 31 ரன்களுக்கும், அயான் கான் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, பிறகு வந்த முகமது நதீம், சந்தீப் கௌத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பிறகு இணைந்த ஷோயிப் கான் - சுராஜ் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ செஃபெர்ட் 3 விக்கெட்டுகளையும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 4 ரன்களுக்கும், கேசி கார்டி 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த பிராண்டன் கிங் - கேப்டன் ஷாய் ஹோப் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதத்தையும் கடந்தனர்.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிராண்டன் கிங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைக் கடந்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாய் ஹோப் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 39.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிராண்டன் கிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.