ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நேற்று தொடங்கியது.
மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட் நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிரதமர் லெவன் அணியில் சாம் கொண்டாஸ் சதமடித்ததுடன் 107 ரன்களையும், ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்களையும் சேர்க்க, 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களையும், ஷுப்மன் கில் 50 ரன்களையும், நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 42 ரன்களை சேர்க்க 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டியில் வெற்றிபெற்றது அற்புதமாக இருந்தது. ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம். ஆனால் முழு ஆட்டமும் எங்களுக்கு கிடைக்காதது கொஞ்சம் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் முதல்நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்ட நிலையில், எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சர்ஃப்ராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி
Also Read: Funding To Save Test Cricket