ஆடுகளம் ஒன்றும் விளையாடுவதற்கு கடினமாக இல்லை - கேஎஸ் பரத்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்டுகளில் பலத்த தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா ஏற்கனவே பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஒன்றாம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரிஷப் பன்ட் இல்லாததால் கே எஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
இந்த நிலையில் கேஸ் பரத் டெல்லியில் நடைபெற்ற கடைசி இன்னிங்ஸில் 22 பந்துகளை எதிர் கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கே எஸ் பரத், “ நான் டெல்லியில் நன்றாக விளையாடினேன். என்னுடைய பணி ஆட்டத்தை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்காப்பு ஆட்டத்தில் நாம் நம்பிக்கையோடு விளையாட வேண்டும். ஆடுகளம் ஒன்றும் விளையாடுவதற்கு கடினமாக இல்லை. உங்கள் திறமைகளை நம்பி உங்கள் தடுப்பாட்டத்தை நம்பிக்கை வைத்து விளையாடினால் நிச்சயமாக ரன்கள் கிடைத்திருக்கும். ரோகித் என்னிடம் பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் இறங்குவது குறித்து முன்பே சொல்லியிருந்தார்.இதன் மூலம் பேட்டிங்கில் ஏதேனும் நாம் அணிக்காக பங்கு அளிக்க வேண்டும் என எண்ணினேன்.
இந்த ஆடுகளத்தில் ஷாட் தேர்வு மிகவும் முக்கியமாக இருந்தது. வெறும் தடுப்பாட்டுத்தை மட்டுமே நம்பி இருந்தால் நிச்சயம் ரன் கிடைக்காது. இதனால் நான் எப்படி ரன் கிடைக்கும் என்பதையும் யோசித்து விளையாடினேன். அஸ்வின் ஜடேஜா போன்ற டாப் கிளாஸ் ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் விக்கெட் கீப்பிங் செய்வது சுலபமான காரியம் கிடையாது. நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்த பணியை செய்துதான் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.
இதன் மூலம் என்னுடைய பணி சுலபமாக இருந்தது. இந்த வாய்ப்புக்காக நான் என்னையே தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். நாக்பூரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி இருக்கிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. தற்போது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது என்னுடைய மிகப்பெரிய கனவு. இதில் நான் சிறப்பாக செயல்படுவேன்” என கூறியுள்ளார்.