இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களையும், ரவீந்திரா 65 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் ஆட்டானது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

அதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 86 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 48 ரன்களையும் சேர்க்க, இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். 

இதில் ஜெய்ஸ்வால் 77 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 42 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதுடன் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தோல்வி ஏமாற்றத்தை தருகிறது. இது நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல. மேலும் இப்போட்டிக்கான கிரெடிட்டை நியூசிலாந்திற்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எங்களைவிட சிறப்பாக விளையாடினர்.  அவர்களுடைய சவால்களுக்கு நாங்கள் பதிலளிக்க தவறியதாலேயே தோல்வியின் பக்கம் உள்ளோம்.

 

Advertisement

நாங்கள் போதுமான ரன்கள் எடுத்ததாக நினைக்கவில்லை. வெற்றிக்கு 20 விக்கெட்டுகள் எடுப்பது அவசியம். ஆனால் அதற்கு பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதும் முக்கியம். அவர்கள் 200-3 என்ற நிலையில் இருந்தபோது, நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை 259 ரன்களுக்குள் சுருட்டியது சிறப்பான ஒன்றாக இருந்தது. பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான்.

மேலும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நாங்கள் மேற்கொண்டு ரன்களைச் சேர்த்திருந்தால் ஆட்டத்தின் முடிவை அது நிச்சயம் மாற்றி இருக்கும். தற்போதைய நிலையில் நாங்கள் வான்கடேவில் நடைபெறும் அடுத்த போட்டியை வெல்ல விரும்புகிறோம். இங்கே அணியாக தோல்வியை சந்தித்தோம். அதற்காக பேட்ஸ்மேன்கள் அல்லது பவுலர்களை மட்டும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. அதனால் அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படும் திட்டத்துடன் வருவோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News