கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை - ஷுப்மன் கில்!

Updated: Mon, Apr 22 2024 12:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 35 ரன்களையும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் 35 ரன்களையும், சாய் சுதர்ஷன் 31 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபாரமாக விளையாடிய ராகுல் திவேத்தியா 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த வெற்றிகுறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியை நாங்கள் சற்று முன்னதாகவே முடிக்க விரும்பினேன்.  இருப்பினும் இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் கேப்டனாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதில் ஓவர் ரேட்டை தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களும் நன்றாகத்தான் இருக்கிறது.

நான் களத்தில் பேட்டிங் செய்யும்போது, எப்போதும் ஒரு பேட்டராக விளையாட விரும்புகிறேன், கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை. இந்த போட்டியில் லிவிங்ஸ்டோன் என்னை அடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் நான் ஆட்டமிழந்த அந்த பந்தில், நான் ஒரு பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்தாலும் அல்லது எங்களுக்குள் இருந்த சிறிய தகராறு இல்லாமல் இருந்தாலும் கூட நான் அதனை அடிக்கவே முயற்சி செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை