இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடரை இழந்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
அனைத்து நல்ல விசயங்களும் முடிவுக்கு வரும் என்பதை குறிப்பிட்ட கோலி, தனது கேப்டன் பயணமும் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். அவர்கள் யார் என்பதை காண்போம்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவுக்கே டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். டெஸ்டிலும் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். ஆனால் கிரிக்கெட்டின் 3 பிரிவுகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தால், அவருக்கு சுமை அதிகரிக்கும் என்ற கருத்தே தற்போது அவருக்கு பாதகமாக உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனால் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்கும் உரிமை இவருக்கு உள்ளது. ஆனால் டெஸ்ட் அணியை வழிநடத்தும் அளவுக்கு ராகுலுக்கு அனுபவம் இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் ராகுல் பல தவறுகளை மேற்கொண்டார்
இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டனாக நியமிக்கும் கலாச்சாரம் தொடங்கியுள்ளதால் பும்ராவுக்கும் கேப்டன் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது
இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரும் கேப்டன் பதவிக்கு பரீசிலிக்கப்படுகிறது. அஸ்வின் கிரிக்கெட் நுணுக்கங்களில் சிறந்தவர். ஆக்கோரஷமாக விளையாட கூடியவர். பந்துவீச்சாளர்கள் கேப்டனாக இருந்தால், அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஆனால், அஸ்வின் ஆசியாவுக்கு வெளியில் பந்துவீச்சில் கும்ப்ளே போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அஸ்வினுக்கு அது பாதகமாக பார்க்கப்படுகிறது.