ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Dec 08 2022 12:20 IST
'Why didn't he come in to bat earlier?': Gavaskar after Rohit Sharma smashes 51* with dislocated thu (Image Source: Google)

வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் தொடரிலும் 2 - 0 என வங்கதேச அணி வெற்றி கண்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தியா தோல்வியடைந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபீல்டிங்கின் போது விரல்களில் காயமடைந்த ரோஹித் சர்மா, டாப் ஆர்டரில் பேட்டிங்கிற்கே வரவில்லை. கோலி, தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் 44 பந்துகளில் 66 ரன்கள் தேவை, ஆனால் 8 விக்கெட் பறிபோனது என்ற இக்கட்டான சூழலில் 9வது வீரராக ரோஹித் சர்மா களத்திற்குள் வந்தார்.

கேப்டனாக காயத்தையும் பொருட்படுத்தாமல் வலியுடன் விளையாடிய ரோஹித் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற போது, ஒரு பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்தை அடிக்கமுடியாமல் சிங்கிள் மட்டுமே எடுத்தார். வலியிலும் கடைசி வரை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மாவை எதிரணி வீரர்களும், ரசிகர்களுமே பாராட்டினர்.

இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மட்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசியா அவர், “ரோஹித் சர்மா எப்படிப்பட்ட தரமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது இந்தியா வெற்றிக்கு அருகில் சென்ற போன போது, அவர் ஏன் முன்கூட்டியே பேட்டிங் ஆட வரவில்லை. அவர் 9ஆவது வீரராக விளையாடுகிறார் என்றால் அதனை 7ஆவது இடத்தில் விளையாடியிருக்க வேண்டியது தானே.

இந்தியா 65/4 என தடுமாறிய போது ஸ்ரேயாஸ் ஐயர் - அக்‌ஷர் பட்டேல் ஜோடி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். அக்‌ஷர் பட்டேல் மிக வித்தியாசமாக விளையாடினார். ரோஹித் இனி பேட்டிங்கிற்கு வரமாட்டார் என அக்‌ஷர் நினைத்ததால் சிறப்பாக விளையாடியிருந்தார். அவரின் ஷாட் தேர்வுகள் சிறப்பாக இருந்தன.

ஒருவேளை ரோஹித் சர்மா 7வது இடத்தில் விளையாடியிருந்தால் ஒட்டுமொத்த முடிவும் மாறியிருந்திருக்கும். ரோஹித்திற்கு இன்னும் சிறிது நேரம் அவகாசம் கிடைத்திருக்கும் என்பதால் கூடுதலாக அதிரடி காட்டியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை